கர்நாடகாவில் ‘ஜெயிலர்’ டிக்கெட் விலை கிடு கிடு… ரூ.5,000 வரை ‘வசூல் வேட்டை’

by vignesh

அண்டை மாநிலமான கர்நாடகாவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அங்கு பெரும்பாலான திரையரங்குகளில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதாக அதிகாரபூர்வமாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பெங்களூருவில் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாக கூறப்படுகிறது.

பெங்களூருவை பொறுத்தவரை தமிழில் 720 காட்சிகளும், கன்னடத்தில் 2 காட்சிகளும், தெலுங்கில் 8 காட்சிகளும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலையில் தொடங்கியது. முதல் நாளிலே ஆயிரக்கணக்கானோர் திரையரங்கு வாசலில் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கினர். சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து டிக்கெட் வாங்கினர். இதனால் ஆகஸ்ட் 10ம் தேதிக்கான முதல் காட்சிக்கான டிக்கெட் 90 சதவீதத்துக்கும் அதிகமாக விற்று தீர்ந்தன.

பெங்களூருவில் தனி திரையரங்குகளில் ஒரு டிக்கெட் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்ய‌ப்பட்டது. பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.600 முதல் ரூ.2200 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே, சில தரகர்கள் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, கள்ளச் சந்தையில் ரூ.5,000-க்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

 

You may also like

Leave a Comment