10 ரூபா டிக்கெட்… மூடப்படும் உதயம் தியேட்டர்!

by vignesh

சென்னையின் அடையாளங்களாக இருந்த பல திரையரங்குகள் தற்போது அடுத்தடுத்து மூடப்பட்டு, திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என உருமாறி வருகின்றன. இந்த வரிசையில் நாகேஷ் தியேட்டர், காமதேனு தியேட்டர். அகஸ்தியா தியேட்டர், ஆல்பர்ட் தியேட்டர், அபிராமி தியேட்டர் என அடுத்தடுத்த திரையரங்குகள் மூடுவிழா கண்டுள்ளன. அந்த பட்டியலில் தற்போது சென்னையின் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள உதயம் திரையரங்கும் சேர்ந்துள்ளது.

இந்த தியேட்டரில் மட்டும் தான் இப்போதும் சில சீட்டுகளுக்கு அதாவது முன் வரிசை சீட்டிற்கு நீண்ட காலமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த 1983ம் ஆண்டிலேயே மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கமாக கட்டப்பட்ட உதயம் தியேட்டர் அசோக்நகர், சைதாப்பேட்டை, மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர மக்களின் சிறப்பான திரையரங்க அனுபவத்திற்கு கைக்கொடுத்தது. எந்தவொரு கொண்டாட்டத்தையும் திரையில் சென்று கழிக்கலாம் என்ற நினைப்பை ரசிகர்களிடையே அதிகமாக விதைத்தது உதயம் தியேட்டர்.

தற்போது அந்த திரையரங்கம் மூடப்படுவது அனைத்து தரப்பு மக்களிடையேயும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கொண்டாட்டங்களின் சாட்சியாக தொடர்ந்து இருந்து வந்த உதயம் திரையரங்கம், நாளையே வேறு வடிவத்தில் உருமாறலாம். ஆனால் அந்த இடத்தை கடக்க முயலும் ரசிகர்கள் ஒரு முறையாவது உதயம் தியேட்டரை நினைக்காமல் நகர முடியாது. காலமும் காட்சியும் மாறும் என்பதற்கு தற்போது எடுத்துக்காட்டாக மாறிவிட்டது உதயம் தியேட்டர்.

 

You may also like

Leave a Comment