கருமேகங்கள் கலைகின்றன படம் எப்படி இருக்கு???

by vignesh

ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும் (பாரதிராஜா), பரோட்டோ மாஸ்டர் வீரமணியும் (யோகிபாபு) ஒரு பேருந்துப் பயணத்தில் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவரும் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, அதை மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பது கதை.

இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம் பாரதிராஜா. பல பேரை தனது தீர்ப்புகளின் வழியாகத் தண்டித்த நீதிபதி, குற்றவுணர்வு எனும் குற்றவாளிக் கூண்டுக்குள் சிக்குண்டு, மன்னிப்புக்காகக் கையேந்தி மருகும் காட்சி, தமிழ் வாழ்க்கை அறத்தின் மீது கொண்டுள்ள பிடிமானத்தை மீட்டெடுக்கும் முயற்சி. பாரதிராஜாவுடைய முதுமையின் தள்ளாமையே அவர் ஏற்றுள்ள ராமநாதன் கதாபாத்திரத்துக்குப் பாதி உயிரைக் கொடுத்துவிடுகிறது. மீதியை நடிப்பு மேதையாக அவர் அளவாக வெளிப்படுத்தி தனக்குக் கிடைத்த வாழ்நாள் கதாபாத்திரத்தைச் சிறப்பு செய்திருக்கிறார்.

அடுத்த இடத்தில், அதிதி பாலன், யோகி பாபு, கவுதம் மேனன், மோகனா சஞ்சீவி, சிறார் நடிகர் சாரல் தொடங்கி படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனைக் கலைஞர்களும் குறையில்லாத கதாபாத்திர நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

தவறியும் வணிக அம்சங்கள் எதனையும் நுழைத்துவிடாமல், ஒரு நவீன இலக்கியப் பிரதியைப் போல் கதையின் முடிவைக் கையாண்டிருக்கும் இந்தப் படத்தை ,பிரெஞ்சு, பெர்ஷியன், இட்டாலியானோ தொடங்கி உலக சினிமா செழித்து விளங்கும் எந்த மொழியில் ‘டப்’ செய்து வெளியிட்டாலும் கண்களைக் குளமாக்கி, மனதைக் குணமாக்கும் கார் மேகம் இப்படம். குடும்பத்துடன் போய் இப்படத்தைக் காண்பதன் மூலம், மூன்று தலைமுறை மனிதர்கள் இதயம் நிறையப் பேரன்பை எடுத்துக்கொண்டு வரலாம்

You may also like

Leave a Comment