1963-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீதேவி தனது 4ஆவது வயதிலேயே ‘துணைவன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக கடவுள் முருகனாக நடித்திருப்பார். ‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘நம் நாடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜிகணேசன் ஆகியோருடன் நடித்த பெருமை ஸ்ரீதேவிக்கு உண்டு.
‘ஹிம்மத்வாலா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தேசிய அளவிலான நடிகையாக ஸ்ரீதேவி உயர்ந்தார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர், 2017-ம் ஆண்டு வெளியான ‘MoM’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்தப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே 2018-ல் காலமானார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் எனப்படும் சிறப்பு சித்திரத்தை வெளியிட்டு அவரை கவுரவித்துள்ளது.