ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 48-வது பிறந்தநாள் ஜூன் 23கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூர்யா ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தின் நரசராவ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சூர்யா பிறந்தநாளுக்காக பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
நக்கா வெங்கடேஷ் மற்றும் போளூர் சாய் என்ற அந்த இரண்டு மாணவர்களும் பேனர் கட்டிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த தனது ரசிகர்களின் குடும்பத்தை வீடியோ காலில் தொடர்புகொண்டு பேசிய நடிகர் சூர்யா அவர்களுக்கு கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளார்.